6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிகள் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஹாக்கி, பளு தூக்குதல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பேட்மிண்டன், வாள்வீச்சு, நீச்சல், சைக்கிளிங், மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட 27 விளையாட்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கேலோ இந்தியா பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார். 81 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீராங்கனை கீர்த்தனா 188 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
81 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு தமிழக வீராங்கனை ஓவியா 184 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தற்போது மகாராஷ்டிரா 44 தங்கம் உட்பட 127 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், ஹரியானா 33 தங்கம் உட்பட 95 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், தமிழ் நாடு 29 தங்கம் உட்பட 82 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.