ஐந்து பேர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஐந்து பேர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அந்த நாடுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இந்தியா ‘பி’பிரிவில் எகிப்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜமைக்கா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தொடக்க நாளான நேற்று 2 லீக் போட்டிகளில் விளையாடியது.
முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக வெற்றியும், 2 வது போட்டியில் எகிப்து அணிக்கு எதிராக தோல்வியும், மூன்றாவது போட்டியில் ஜமைக்காவுடன் வெற்றியும் பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, நெதர்லாந்து அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியில் இந்தியா முடிந்த அளவு போராடியும் நெதர்லாந்தை வீழ்த்த முடியவில்லை.
இப்போட்டி முடிவில் இந்திய அணி 4-7 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த தொடரில் இந்தியாவின் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.
இந்திய அணி சார்பில் ரஹீல் முகமது 3 கோலும், மந்தீப் 1 கோலும் அடித்தனர். நெதர்லாந்து அணி சார்பில் விஜ்ன் சாண்டர் மற்றும் அலெக்சாண்டர் தலா 2 கோல்களும், லூகாஸ், வான் ஆர்ட் ஜேமி, பெபிஜின் ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர். தற்போது நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.