கடந்த 2023-ஆம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கி உள்ளதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இப்போது, அமெரிக்கா செல்வதற்கான விசா பெற விண்ணப்பிப்பவர்களில், 10-ல் ஒருவர் இந்தியராக உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டில், 14 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க விசாக்கள் வழங்கப்பட்டது. இவ்வளவு எண்ணிக்கையில் உலகின் வேறு எந்த நாட்டிற்கும் விசா வழங்கப்படவில்லை. மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் 75 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பார்வையாளர் விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் ஆயிரம் நாட்களாக இருந்தது. ஆனால், தற்போது 250 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், மற்ற விசா பெறுவோருக்கும் காத்திருப்பு நேரம் மிகவும் குறைவாகி உள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில், 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது. மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, விசாக்களை வழங்கி வருகிறது.
இந்திய மாணவர்கள் அதிகளவில் அமெரிக்காவிற்கு படிக்க செல்கின்றனர். அமெரிக்காவில் படிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில், கால் பங்கிற்கும் அதிகமானவர்கள் இந்தியர்களாக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.