நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “நான் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரிடம் பேசியிருக்கிறேன். அரசு சார்பாக அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இடைநீக்கம் ரத்து சபாநாயகர், மக்களவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட சிறப்புகுழுக்களைத் தொடர்பு கொண்டு இடைநீக்கக்கத்தை ரத்து செய்து அவர்கள் (எம்.பி.,க்கள்) அவைக்கு வர வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இருவரும் அதற்கு சம்மத்தித்துள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் நாளை கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்களா என்று கேட்ட போது, “ஆம்” என்றார்.
“ஆளும் பாஜக உள்ளிட்ட 30 கட்சிகளைச் சேர்ந்த 45 தலைவர்கள் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமூகமான முறையில் கூட்டம் நடந்தது. இது ஒரு குறுகிய கூட்டத் தொடர். மேலும் 17-வது மக்களவையின் கடைசிக் கூட்டத்தொடர். யாரும் பதாகைகளுடன் வரவேண்டாம் என்று எம்.பி.,க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றார்.