இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை தீப்தி சர்மாவை உத்திர பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) நியமித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி சர்மா. இவர் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகழ்கிறார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பொறுத்தவரையிலும், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்நிலையில் தீப்தி சர்மாவின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை துணைக் காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) நியமித்துள்ளது.
தீப்தி சர்மாவுக்கு விருது மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பணி நியமன கடிதத்தையும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவத்புரி பகுதியைச் சேர்ந்தவர் தீப்தி சர்மா. இதே பகுதியை சேர்ந்த தீபக் சாகர் போன்றவர்களுடன் சேர்ந்து தனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக்கொண்ட இவர், 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 194 போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
டிசம்பர் 2023ஆம் ஆண்டு ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா ஆவார்.