வடகொரியா தனது மேற்கு கடற்கரையிலிருந்து, இன்று பல ஏவுகணை ஏவியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
காலை 7 மணியளவில் கண்டறியப்பட்ட ஏவுகணைகளை, தென் கொரிய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் ஆய்வு செய்து வருவதாக, தென் கொரியாவின் கூட்டுப் படை கூறியது. எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டது, அவை எவ்வளவு தூரம் பறந்தன, அந்த ஏவுகணைகள் நிலத்தில் இருந்து ஏவப்பட்டதா? அல்லது கப்பலில் இருந்து ஏவப்பட்டதா? என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை உடனடியாக வழங்கவில்லை.
இந்த மாதத்தில் வடகொரியா மூன்றாவது முறையாக சோதனை நடத்தி உள்ளது. இதற்கிடையே, கடந்த 24 மற்றும் 28-ஆம் தேதிகளில், வடகொரியா நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைத்துள்ள, புல்வாசல்-3-31 என்ற ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.