19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று சூப்பர் 6 சுற்று தொடங்குகிறது. இன்றைய சூப்பர் 6 சுற்றில் மொத்தமாக 3 போட்டிகள் நடைபெற்றது.
அதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடிய போட்டியானது மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முஷீர் கான் 131 ரன்களை எடுத்தார்.
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் 52 ரன்களும், மற்றொரு தொடக்க வீரரான அர்ஷின் குல்கர்னி 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் கேப்டன் உதய் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ரியான், கம்மின், ஏவால்ட் மற்றும் ஆலிவர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்களை பறிகொடுத்தது.
அப்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 0/2 ஆகா இருந்து, தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜாக்சன் 19 ரன்களை எடுத்தார். ஜேம்ஸ் 16 ரன்களும், சேவியர் 12 ரன்களும், நெல்சன் 10 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் ஓரிலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 28வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பாண்டே 4 விக்கெட்களை வீழ்த்தினார். ராஜ் மற்றும் முஷீர் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அர்ஷின் மாறும் திவாரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 2 விக்கெட்கள் மற்றும் 131 ரன்களை எடுத்த முஷீர் கானுக்கு வழங்கப்பட்டது.