சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் காடுகளுக்கு நடுவே நக்சலைட்டுகளின் சுரங்கப்பாதையை பாதுகாப்புடைப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நக்சலைட்டுகள் மறைந்திருந்து அவ்வப்போது, காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்துகின்றனர். இதில், இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சத்தீஸ்கரின் பிஜப்பூர் – சுக்மா எல்லையில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில், குறைந்தது 6 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து, சத்தீஸ்கரின் தண்டேவாடா – பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பிஜப்பூர் மாவட்டத்தில் காடுகளுக்கு நடுவே 20 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். இந்த சுரங்கப்பாதையை நக்சலைட்டுகள் பதுங்கு குழியாக பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.