இமாச்சல பிரதேசம் அடல் சுரங்கப்பாதை அருகே கடும் பனிப்பொழிவில் சிக்கி தவித்த, 300 சுற்றுலா பயணிகளை போலீசார் பாதுகாப்பு மீட்டனர்.
இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலமாக இமாச்சல பிரதேசம் உள்ளது. மேலும், மணாலி – லே நெடுஞ்சாலையில் உள்ள ரோத்தங் கணவாயில் உலகின் மீக நீளமாக அடல் சுரங்கப்பாதை உள்ளது. இப்பகுதியில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களாக குப்ரி, மணாலி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. வீடுகள் மற்றும் சாலைகளை வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இதற்கிடையே, அடல் சுரங்கப்பாதை அருகே பனிப்பொழிவால் 50 வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றும் சிக்கிக் கொண்டன. இதில், பயணம் செய்த 300 சுற்றுலா பயணிகள், பல மணி நேரம் காத்திருந்தனர். நேரம் செல்லசெல்ல பனிப்பொழிவு அதிகரித்து கொண்டே இருந்ததால், சுற்றுலா பயணிகள் செய்வதறியாது தவித்து நின்றனர். தகவலறிந்து வந்த போலீசார், 300 சுற்றுலா பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.