லடாக்கில் எல்லையில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்து சென்ற கிராம மக்களை சிண்டிய சீன ராணுவத்தை அந்ந கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் நாடோடி மக்கள், எல்லைக் கோடு அருகே இந்திய பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், லடாக்கின் சுசுல் பள்ளத்தாக்கில் உள்ள நியோமா கிராமம், துங்டி பகுதியை சேர்ந்த மக்கள், லடாக் எல்லை பகுதியில் உள்ள காக்ஜங் பகுதிக்கு கால்நடைகளை அழைத்து சென்றனர். அப்போது அங்கு வாகனங்களில் வந்த சீன ராணுவத்தினர் அவர்களை தடுத்தனர். இது சீன இடம், இங்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வரக்கூடாது என்றனர்.
இதனால், கோபம் அடைந்த கிராம மக்கள், சீன ராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீங்கள் இங்கு வந்தது ஏன்? உங்கள் வாகனத்தை இங்கு கொண்டு வந்தது ஏன்? இது எங்களது பாரம்பரிய இடம். காலம் காலமாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருகிறோம் என கோபத்துடன் கூறியதுடன், சீன ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து சீன வீரர்கள் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரி 2-ம் தேதி நடந்ததாக தெரிகிறது.