ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாரணாசி ஞானவாபி மசூதி இந்து கோவிலை இடித்துதான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வாரணாசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நடைபெற்று வருகிறது.
ஞானவாபி மசூதி, இந்து கோவிலை இடித்துதான் கட்டப்பட்டதா? என்பதை தொல்லியல் துறை கண்டறிய வாரணாசி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் இருப்பது உள்ளிட்டவை விரிவாகவே விவரிக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சிவன், விஷ்ணு, ஹனுமன் சிற்பங்கள், சிலைகள், தூண்கள் என ஞானவாபி மசூதிக்குள் கிடைத்தவை குறித்து தொல்லியல் துறை அறிக்கையில் பட்டியலிடப்படிருக்கின்றன. இது இந்துக்கள் தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்தது.
இந்த நிலையில் ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 நாட்களுக்குப் பின் பூஜைகள் நடத்திக் கொள்ளவும் இந்துக்களுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.