மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறையாக பிப்ரவரி 2ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 4 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக் கூறி கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை. இந்நிலையில் 5வது முறையாக பிப்ரவரி 2ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் எதற்கு சம்மனை புறக்கணித்து வருகிறார் பயமா? என பா.ஜ.க வினர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.