மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பதவியேற்று கொண்டார். கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அரச குடும்பத்தினர், அந்நாட்டின் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராகிம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பதவிப் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டார்.
இவ்விழாவில், அரசு குடும்பத்தினர், அந்நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 1957-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து மலேசியா நாடு சுதந்திரம் பெற்றது. இதன் பின், பொது தேர்தல்கள் நடத்தப்பட்டு, மக்கள் வாக்களித்து, புதியதாக பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருந்தபோதிலும், அங்கு மன்னர் ஆட்சி இருந்து வருகிறது.
மலேசியாவின் மன்னர் அந்நாட்டின் முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, ஆயுதப்படைகளின் தளபதியாக இருப்பது எனப் பல பொறுப்புகளைப் பெறுகிறார். இந்நாட்டின் நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனையை ரத்து செய்வதற்கு மன்னருக்கு அதிகாரம் உள்ளது.