ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம், இவைதான் திமுக அரசின் நான்கு கால்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
வேடியப்ப சுவாமி, வீர ஆஞ்சநேயர், எல்லோரையும் காக்கும் காட்டேரி அம்மன் என ஆலயங்கள் நிறைந்திருக்கும் ஆன்மீக மண். ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமம் அருகே, 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கிடைத்த, தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்று.
ஜோலார்பேட்டை மக்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை பெருநகர மக்கள் தண்ணீர் இன்றி தாகத்தில் தவித்த போது, 400 மில்லியன் லிட்டர் தண்ணீர், ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்த பெரிய மனதிற்குச் சொந்தக்காரர்கள்.
ஒரு காலத்தில் சோலைகள் நிறைந்து இருந்ததால், சோலையார்பேட்டை என அழைக்கபட்டு பின்னர் அதுவே ஜோலார்பேட்டை ஆனது. இன்று சோலைகளும் இல்லை, மக்களுக்கான வேலைவாய்ப்புகளும் இல்லை. தமிழக அரசின் தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் கொள்கைக் குறிப்பு வெளியிடுவது வழக்கம்.
கடந்த 2022-23ஆம் ஆண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,581 ஏக்கரில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்க திட்டம் உள்ளதாக தெரிவித்தார்கள். இந்த 2023-24ஆம் ஆண்டு கொள்கைக் குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பெயரையே காணவில்லை.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இவற்றை உறுதி செய்வது மட்டும் தான் ஒரு அரசின் தலையாய கடமை. தமிழக அரசின் கொள்கைக் குறிப்பு, திருப்பத்தூர் மாவட்டத்தையே ஒதுக்கி வைத்து, இந்த மாவட்ட மக்களுக்கு அநீதி செய்திருக்கிறது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 கோடி நிதியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில், 26,885 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு, 1,51,750 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,38,999 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 65,630 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 98,121 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 53,652 விவசாயிகளுக்கு PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 478 கோடி ரூபாய் என இப்பகுதியின் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.
ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம். இவைதான் திமுக அரசின் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான். தேசியத் தலைவர்கள் அனைவரையும் ஜாதித் தலைவர்களாக மாற்றியது திமுகதான்.
தமிழகம் முழுவதும் ஜாதியின் பெயரால் மக்களைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக அமைச்சர்களின் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள். இன்னும் ஐந்து அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
ஜாதியை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து, இன்று தேர்தலுக்கு முன்பாக ஜாதிக்கலவரத்தை உருவாக்கி வாக்கு வாங்குவது திமுகவின் வழக்கம்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது.
தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை. திமுகவில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும். தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களில், திமுகவினர் வாங்கிய பொருளுக்குப் பணம் தர மறுப்பதும், கடை உரிமையாளர்களைத் தாக்குவதும் தொடர்கதை.
இவற்றை வைத்துத்தான் திமுகவின் இத்தனை ஆண்டுகால அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டு நம்முடைய ஆண்டு. நாம் புதிய காலச்சக்கரத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம்.
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான மனிதர் நமது பிரதமர் மோடி அவர்கள். அவரது தலைமையில், பொருளாதாரத்தில் உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழக மக்களின் பல தலைமுறை எதிர்பார்ப்பான நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனத் தெரிவித்தார்.