சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நேற்று இரவு ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. சுமார் 7 மணி நேர விசாரணைக்குப் பின் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.
ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு முதற்கட்ட விசாரணை கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை டெல்லி சென்ற ஹேமந்த் சோரன் திடீரென தலைமறைவானார். அவரின் இல்லத்திற்குச் சென்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
பின்னர் திடீரென ஹேமந்த் சோரன் நேற்று ராஞ்சி திரும்பினார். ராஞ்சி வந்ததும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நேற்று கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தான் கைதுசெய்யப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இதையெடுத்து நேற்று அமலகத்துறை முன் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டார். இதன் பிறகு சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர்.
7 மணி நேரம் விசாரணை முடிந்த பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று ஹேமந்த் சோரனை ராஞ்சி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தினர். அப்போது ஹேமந்த் சோரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோர ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.