உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான பகுதியில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால், கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
உத்தரகாண்ட், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. உத்தரகாண்டில் இம்முறை பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்கள் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழிகள் முழுவதும் பனியால் சூழ்ந்துள்ளது. திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
உத்தரகாண்டின் மலை பகுதிகளில், நிலவும் கடுமையான பனிப்பொழிவால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். உடலை உறைய வைக்கும் கடும் குளிரில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர்.