ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு முதற்கட்ட விசாரணை கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதிஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை டெல்லி சென்ற ஹேமந்த் சோரன் திடீரென தலைமறைவானார். அவரின் இல்லத்திற்குச் சென்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
பின்னர் கடந்த 31ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடதத அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.