அமெரிக்கா H-1B மற்றும் பிற விசா கட்டணங்களை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, H-1B விசா அல்லது படிவம் I-129-க்கான விண்ணப்பக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் இந்த புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரும். தற்போது 460 அமெரிக்க டாலர்களாக இருக்கும் விசா கட்டணம் 780 டாலர்களாக அதிகரிக்கப்படுகிறது.
தற்போதையக் கட்டணத்தில் இருந்து 69.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் பலருக்கும் சுமையாக இருக்கும். அமெரிக்க அரசுக்கு கணிசமான வருமானத்தைத் தரும் இந்த விசா கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இந்தக் கட்டண உயர்வு மட்டுமல்ல, அடுத்த ஆண்டு முதல் H-1B விசாவுக்கான பதிவுக் கட்டணம் 10 அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 215 அமெரிக்க டாலராக உயர்த்தப்படும்.
அதேபோல, புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவான L-1 விசாக்களுக்கான கட்டணம் 460 அமெரிக்க டாலர்களில் இருந்து 1,385 அமெரிக்க டாலராக உயர்கிறது.
201 சதவீதம் உயர்த்தப்படும் கட்டணம், நிறுவனங்களுக்குள் பரிமாற்றம் செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விசா என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர் விசாக்கள் அல்லது EB-5 விசாக்களுக்கான கட்டணம் 3,675 அமெரிக்க டாலரில் இருந்து 11,160 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 203 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கட்டண உயர்வு இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள், நிர்வாகச் செலவுகளை சரிகட்ட போதுமானதாக இல்லை என்றும், இதனால் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) துறைக்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்டவே விசா கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.