உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22 -ம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்புப் பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான் என நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தி செல்ல துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சென்னையிலிருந்து பிப் – 1 -ம் தேதி முதல் நேரடி தனியார் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து அயோத்திக்கு பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் விமானம், மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடைகிறது.
மறுமார்க்கமாக, மாலை 4 மணிக்கு அயோத்தியிலிருந்து புறப்படும் விமானம், மாலை 6.20 மணிக்குச் சென்னை வந்தடைகிறது.
விமானக் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 180 -க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.