சனாதன தர்மம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக பரவேஸ் என்பவர் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உதயநிதி ஸ்டாலின் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.