நிதிப் பற்றாக்குறை என்று கூறும் திமுக அரசு, தங்கள் வீண் விளம்பரங்களுக்குச் செலவிட்டுக் கொண்டிருக்கும் நிதியை, ஆக்கபூர்வமான அரசு நிர்வாகத்துக்குச் செலவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக காவல்துறையில், கடந்த 2011 ஆம் ஆண்டு, நேரடி உதவி ஆய்வாளர்களாகப் பணியில் சேர்ந்த 1,095 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல், உதவி ஆய்வாளர்களாகவே இருந்து வருகிறார்கள் என்ற செய்தி வருந்தத்தக்கது. பிற அரசுத்துறைகள் அனைத்திலும், சுமார் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளிலேயே பதவி உயர்வு பெறும்போது, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் காவல்துறை மட்டும் எப்போதும் வஞ்சிக்கப்பட்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த ஆண்டே, காவல் உதவி ஆய்வாளர்களின் பணி உயர்வு தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு, காவல்துறை தலைமை இயக்குனரிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால், அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக, அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேவையற்ற வீண் செலவீனங்களிலும், ஆளுங்கட்சியின் ஆடம்பர விளம்பரங்களுக்கும் செலவிடும் நிதியை விட, தமிழகத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் தலையாய பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் பதவி உயர்வுக்குச் செலவிடப்படும் நிதி நியாயமானதாக இருக்கும்.
மேலும், குற்ற விகித அடிப்படையில், தமிழகத்தில் துணை ஆய்வாளர்களால் நிர்வகிக்கப்படும் 423 காவல் நிலையங்களையும் தரம் உயர்த்தி, ஆய்வாளர்கள் நிர்வகிக்கும்படி மாற்றினாலே, பல உதவி ஆய்வாளர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், இந்த நிர்வாகச் சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ளாமல் காவல்துறையைப் புறக்கணித்து வருகிறது திமுக அரசு.
இளம் வயதிலேயே உதவி ஆய்வாளர்களாக நேரடியாக நியமிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றும் உதவி ஆய்வாளர்கள், 13 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, அவர்களின் பணிகளையும் இது பாதிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், காவல்துறையில் இணைந்து மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களின் ஆர்வத்தையும் திமுக அரசின் பாராமுகம் நிச்சயம் பாதிக்கும்.
எனவே, இனியும் தாமதிக்காமல், உடனடியாக காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய நிர்வாகச் சீரமைப்புக்களை விரைந்து மேற்கொண்டு, 13 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி ஆய்வாளர்களாகவே இருக்கும் காவல்துறை சகோதரர்களுக்கு, உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நிதிப் பற்றாக்குறை என்ற சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தைக் கூறும் திமுக அரசு, தங்கள் வீண் விளம்பரங்களுக்குச் செலவிட்டுக் கொண்டிருக்கும் நிதியை, ஆக்கபூர்வமான அரசு நிர்வாகத்துக்குச் செலவிடுவது அனைவருக்கும் பலனளிக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
















