உலகக்கோப்பை ஐந்து பேர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உலகக்கோப்பை ஐந்து பேர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அந்த நாடுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை விளையாடியது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இதில் இந்தியா ‘பி’பிரிவில் எகிப்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜமைக்கா அணிகளுடன் இடம்பெற்றிருந்தது. இதில் காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் விளையாடியது.
ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. நெதர்லாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி இறுதிப்போட்டியில் மலேசியா அணியுடன் விளையாடியது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது ஆண்கள் 5 பேர் ஹாக்கி உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
முன்னதாக நடைபெற்ற முதலாவது பெண்கள் 5 பேர் ஹாக்கி உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியே சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.