ஜார்கண்ட் மாநிலத்தில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் பங்கேற்க ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவானார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி ஆஜரான அவரை, அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். முன்னதாக அவர் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஆளுநரை சந்தித்த சம்பாய் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். பின்னர் அவரை ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க அழைத்தார். பின்னர் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ராஞ்சி நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதி அளித்துள்ளது.
81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.