விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரம் மற்றும் பழமையான சிலைகளை காணவில்லை என செயல் அதிகாரி போலீசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆகும். இந்த கோவிலில் வருடம்தோறும் திருக்கல்யாண உற்சவங்கள் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இப்படி புகழ் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவில், நிர்வாக அதிகாரி முத்து ராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
அதில், கடந்த 2015 மற்றும் 2016 -ம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் குடமுழுக்கு விழா மற்றும் ஸ்ரீ வடபத்ரசயனர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அப்போது, அங்குள்ள கொடி மரங்கள் மூன்றும் அகற்றப்பட்டு புதிய கொடி மரங்கள் நடப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட மூன்று கொடி மரங்களில் செப்பு தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் இருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்களைக் காணவில்லை என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் அருகே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வாசற்படியில் உள்ள யானை சிலைகள் இரண்டை காணவில்லை என்றும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
கோவில் நிர்வாக விவகாரங்களில் திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன. அதை மெய்பிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.