காஷ்மீரில் கொட்டும் பனிப்பொழிவுக்கு மத்தியில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை, இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு சென்று, சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாயையும், சேயையும் காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. திரும்பும் திசையெங்கும் வெண்போர்வை போர்த்தியது போல், பனி படர்ந்து காட்சியளிக்கிறது. சாலைகள், வாகனங்கள், வீடுகள், மரங்கள் என அனைத்தையும் பனி போர்த்தி உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மோனாபல் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவ உதவிக்காக காத்திருந்தார்.
ஆனால், பனிப்பொழிவால் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளதால், வாகன போக்கவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் அருகில் உள்ள இராணுவ மையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த இராணுவ வீரர்கள் உடலை உறைய வைக்கும் பனியையும் பொருட்படுத்தாமல், கர்ப்பிணிப் பெண்ணை பாதுகாப்பாக தூக்கி சென்று அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தயார்நிலையில், மருத்துவக்குழு இருந்தது. சிறிது நேரத்தில் அந்தப் பெண் அழகான குழந்தையைப் பெற்றெடுத்தாள். கர்ப்பிணிப் பெண்ணை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து, தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.