இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 396 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக ஜெஸ்வால் 209 ரன்களை எடுத்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் இந்திய அணி 255 ரன்களை எடுத்தது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 104 ரன்களை எடுத்தார்.
முதல் இன்னிங்சில் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து அவுட் ஆப் பார்மில் இருந்த கில் இரண்டாவது இன்னிங்சில் 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 147 பந்துகளில் 104 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த போட்டியில் கில் மூன்றாவது இடத்தில் இறங்கி தன்னுடைய டெஸ்ட் மூன்றாவது சதத்தை அடித்துள்ளார். மேலும், 7 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாம் இடத்தில் களமிறங்கிய ஒரு வீரர் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.