காஷ்மீரின் முக்கிய சாலைகளில் கொட்டி கிடக்கும் பனியினை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. காஷ்மீரின் சில பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து உள்ளது.
காஷ்மீரில் இம்முறை பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வீடுகள், வாகனங்கள், சாலைகள் என அனைத்தையும் பனி சூழ்ந்து காணப்படுகிறது.
காஷ்மீரின் முக்கிய சாலைகளில் பனி படர்ந்து காணப்படுவதால், முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற இடங்களுக்கு
மக்கள் போக முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
முக்கிய சாலைகளில் கொட்டி கிடக்கும் பனியினை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கர்னா – குப்வாரா சாலையில் இருக்கும் பனியினை, பனி அகற்றும் வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
சுற்றுலா நகரங்களான குப்வாரா, பந்திபோரா, பாரமுல்லா, குல்மார்க், அனந்த்நாக், சோபியான், ஸ்ரீநகர் என காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சுற்றுலா தளங்களில் பொதுமக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.