காஷ்மீரின் உதம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜம்மு – ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், திக்ரி அருகே ஒரு குடும்பத்தினர் ஜம்முவில் இருந்து உதம்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
படுகாயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.