கோபாலபுரத்தில் ஆரம்பித்த குடும்ப அரசியல், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்று கரையானைப் போலப் பரவியிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஆரணி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
ஆரணியில் செய்த யாகத்தின் பலனாகப் பிறந்தவர் ஸ்ரீராமர். தமிழகத்திற்கும் ஸ்ரீராமசந்தர மூர்த்திக்கும் உள்ள தலையான பந்தத்தின் சாட்சியாக இந்த கோவில் இருக்கிறது. ஆனால் சிலர், ராமனுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள்.
அயோத்தியில் இன்று ராமர் இருக்கிறார் என்றால், அதற்குக் காரணமே ஆரணிதான். ஆரணி, 70 ஆண்டு கால மிகப் பழமையான நகராட்சி. இத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நகராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆரணிப் பட்டு உலக அளவில் புகழ்பெற்றது. நமது மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றது. ஆரணியில் மட்டும் 50 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமது பாரதப் பிரதமர், தமது மனதின் குரல் நிகழ்ச்சியில், பல முறை, ஆரணியைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டு, நாடு முழுவதும் ஆரணியின் பெருமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளேரி கிராம பஞ்சாயத்து தலைவரிடம் காணொளி வாயிலாக பேசிய, நமது பாரத பிரதமர் மோடி அவர்கள், ஜல் ஜீவன் திட்டம் பெண்கள் குடத்தை எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்று தண்ணீர் பிடிக்கும் அவஸ்தையை குறைத்துள்ளதால் நீங்கள் ஆரணி பட்டு பின்ன அதிக நேரம் ஒதுக்கமுடியும் என்று ஆரணி பட்டை மேற்கோள்காட்டி பேசினார் மோடி.
கடந்த 2021 செப்டம்பர் மாதம், தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நதிகளை மீட்டெடுப்பதன் அவசியத்தை பற்றி பேசும்போது, ஆரணி பகுதியில் 1000 பெண்கள் இணைந்து, வற்றிக்கிடந்த நாகநதியை மீட்டெடுத்ததை பற்றி தெரிவித்து ஆரணி மக்களை பாராட்டினார். 21 கிராமங்களில் இருந்து 1000 பெண்கள் நினைத்தால் ஒரு நதியை மீட்டெடுக்கமுடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளார்கள். இன்று நாகநதியில் தண்ணீர் ஓட, விவசாயம் செழிக்க இவர்கள் தான் காரணம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், அடிப்படை அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வீடற்றவர்களுக்கு வீடு, வீட்டுக்கு வீடு குழாய் குடிநீர், கழிப்பறைகள், விவசாயிகள், பெண்கள் நலத்திட்டங்கள், புகையில்லா சமையல் என்ற நோக்கில், இன்று நாட்டில் 99.99% இல்லங்களுக்கு ரூ.300 மானியத்துடன் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மானியத் தொகை வங்கிக் கணக்குக்கே நேரடியாக அனுப்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ரூபாய் எட்டரை லட்சம் கோடி நிதி, மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. ராமர் கோவில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக் கட்டப்படவில்லை.
அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து, நீதி மன்றத்தில், ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து நடக்கும் வழக்குகளில் எல்லாம் முறையாக தீர்ப்பு பெற்று, இந்திய மக்கள் எல்லோரிடமும் நிதி பெற்று, நமது பிரதமர் பிராணப் பிரதிஷ்டை செய்து ராமர் கோவில் திறக்கப்பட்டது.
மத்திய அரசின் பட்ஜெட், ஆண்டுக்கு நாற்பது லட்சம் கோடி. கடந்த பத்து ஆண்டுகளில், நானூறு லட்சம் கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ரூபாய் கூட மத்திய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
நமது பிரதமர் அவர்களும் அவரது 76 அமைச்சர்களும் நேர்மையின் அடையாளமாக இருக்கிறார்கள். பத்து ஆண்டுகளில் ஜனநாயகம் வலிமை அடைந்திருக்கிறது.
ஆனால் தமிழகத்தில், ஐம்பது ஆண்டுகளாகக் குடும்ப ஆட்சி நடக்கிறது.
அப்பா மகன் பேரன் என்று இருக்கும் இவர்களால் மக்களின் கஷ்டம் எப்படிப் புரியும்? மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்? கோபாலபுரத்தில் ஆரம்பித்த குடும்ப அரசியல், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்று கரையானைப் போலப் பரவியிருக்கிறது.
ஆரணி மக்களின் நெடு நாள் கோரிக்கையான பட்டு பூங்காவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. கருணாநிதி அவர்களில் பெயரில் ஒரு பட்டு பூங்கா ஆரணியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி. ஒரு வருடம் ஆகிறது.
இதுவரை ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. நெசவாளர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி, நெசவாளர்களுக்கு அடையாள அட்டை, நெசவாளர்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைப்பது, நெசவாளர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடனுக்கான வட்டி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைப்பது, நெசவாளர் சேமிப்பு உதவித்தொகை 1000 ரூபாய் என்பது 2000 ரூபாயாக உயர்த்துதல் என வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, பட்டுப் பூங்காவுக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் வைத்துக் கொள்ளட்டும்.
திமுக மொழியை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழில் 55,000 மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் மட்டும் மூன்று மொழி கற்றுக் கொடுக்கபடுகிறது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு, பாஜக ஆட்சிக்கு வரும்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்குவோம்.
அடுத்த ஐம்பது ஆண்டுகளில் நம் குழந்தைகள் எப்படி முன்னேறி இருக்க வேண்டும் என்று இப்போதிருந்தே தயார் செய்கிறோம். தமிழகத்தில் பாஜக வரும் 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, அரசு வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி, குடிக்கு அடிமையானவர்களை மீட்க மையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து, டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும். கள்ளுக் கடைகள் திறக்கப்படும்.
திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு மரியாதை இல்லை. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், காவல் துறையினரைத் தாக்குவதும் தரக்குறைவாகப் பேசுவதும் நடத்துவதுமாக இருக்கிறார்கள். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவல்துறை என்பது மிகக் கடினமான பணி. தங்கள் சுக துக்கங்களை மறந்து, சட்டம் ஒழுங்கைக் காக்க எந்த நேரமும் பணியிலே கவனமாக இருக்க வேண்டும்.
அத்தனை கடினமான பணியில் இருக்கும் காவல்துறையினரை, சமூக விரோதிகள் அவமானப்படுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது, தெலுங்கானா மாநிலத்தைப் போல, தமிழகத்திலும் காவல்துறையினரின் ஊதியம் அதிகரிக்கப்பட்டு இரட்டிப்பாக்கப்படும்.
காவல்துறையினருக்கு பணி நேரம் கட்டாயமாக எட்டு மணி நேரமாகக் குறைக்கப்படும். அதற்கேற்ப காவல்துறையில் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். காவல்துறையில் 33% மகளிருக்கு ஒதுக்கப்படும்.
வரவேற்பாளர் உள்ளிட்ட இதர பணிகளை, ஒப்பந்தப் பணியாளர்களுக்குக் கொடுத்துவிட்டு, முழு நேரமும், சட்டம் ஒழுங்கில் மட்டுமே காவல்துறையினர் கவனம் செலுத்தும்படி மாற்றம் கொண்டு வரப்படும். காவல்துறையினர், நேர்மையாக, தைரியமாக, தவறு செய்தவர்கள் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே மக்களின் கோரிக்கையாக இருக்கும்.
நேர்மையான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக இருக்கும் தலைவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி, வாரிசு என்ற ஒரே தகுதிதான்.
ஊழல், குடும்ப அரசியல் மலிந்து போன அரசியல் கட்சிகளைப் புறக்கணிப்போம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமரின் நேர்மையான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.