திமுக அரசு அந்த நிதியை விவசாயிகளுக்கு இன்னும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை வந்தவாசி தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
120 அடி உயர கோபுரம் பெற்றிருக்கும் தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில் அமைந்திருக்கும் தொகுதி வந்தவாசி. சரித்திரத்தையே மாற்றி எழுதிய நகரம் வந்தவாசி. 1760 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பிரெஞ்சுப் படையும், ஆங்கிலேயர் படையும் பெரும் போரை நடத்திய மண் வந்தவாசி.
வந்தவாசி போர் என்றழைக்கப்படும் இந்தப் போர்தான், உலகில், பிரெஞ்சுப் படைகளின் ஆதிக்கத்தை குறைத்து, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை உயர்த்தியது. வந்தவாசிக்கு பாய் நகரம் என்று மற்றொரு பெயர் உள்ளது. இங்கு கோரை பாய் தயாரிப்பில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் நீர் மேலாண்மை சம்மந்தமான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் எவ்வளவு அறிவியல் பூர்வமாக சிந்தித்தார்கள் என்பதற்கு வந்தவாசியில் கிடைத்த கல்வெட்டுகளே சாட்சி.
வந்தவாசி கோட்டையை புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாற்ற, வந்தவாசி கோரைப்பாய்க்கு புவிசார் குறியீடு பெற, தமிழக பாஜக முயற்சிகள் மேற்கொள்ளும்.
தமிழக அரசியல், ஐம்பது ஆண்டுகளாக, ஊழல், ஜாதி, குடும்ப அரசியல், அடாவடித்தனம் இவற்றை மையமாகக் கொண்டே நடக்கிறது.
இளைஞர்களுக்கு கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற, அனைவருக்குமான அரசியல் மாற்றம் உருவாக வேண்டுமானால், அது பாஜகவால் மட்டும்தான் முடியும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், பாரதத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுத்திருக்கிறோம். 500 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, அனைவரின் ஒப்புதலையும் பெற்று, நீதிமன்றம் வாயிலாக குழந்தை ராமர் கோவில் அமைத்திருக்கிறோம்.
பழங்குடி இனத்திலிருந்து முதல் குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டு, உண்மையான சமூக நீதியைக் கொண்டு வந்திருக்கிறோம். நாட்டின் உயரிய பத்ம விருதுகள், சாமானிய மக்களிள் சாதனையாளர்களைச் சென்றடைகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் அரசியல் தலைகீழாக மாறியிருக்கிறது. ஏழை மக்களை நோக்கி, சாமானியர்களை மையப்படுத்தி நமது அரசு நடக்கிறது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,81,495 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,80,004 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,03,252 பேருக்கு ரூ. 300 ரூபாய் மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 3,58,215 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
4,07,252 விவசாயிகளுக்கு PM Kisan கௌரவ நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடனுதவி 4,168 கோடி ரூபாய் என லட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர்.
வந்தவாசி அருகே மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க, 3,174 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலத்தைக் கையகப்படுத்த திமுக அரசு முயன்றபோது, எதிர்த்துப் போராடிய மேல்மா விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போட்டது திமுக அரசு. அதனை எதிர்த்து பாஜக கண்டனக்குரல் கொடுத்ததால், குண்டாஸ் சட்டத்தை விலக்கிக் கொண்டனர். விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு தொடரும் ஒரே கட்சி திமுகதான்.
2022-23ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகை 663 கோடி ரூபாய் நிதியை, நமது மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கிவிட்டது. ஆனால், திமுக அரசு அந்த நிதியை விவசாயிகளுக்கு இன்னும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகையை, விவசாயிகளுக்கு இன்னும் வழங்காததால், திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். திமுக எப்போதுமே விவசாயிகளின் எதிரியாகத்தான் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்த நாட்டை ஆளத் தகுதி இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்துவதே தேர்தலில் சீட் கேட்க மட்டும்தான் என்று திமுக அமைச்சரே கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காரர்களே கூட்டம் போட்டு, தற்போதைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருக்கு தேர்தல் சீட் கொடுக்காதீர்கள் என்று போராடுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். தொண்டர்கள் இல்லை.
வந்தவாசி மக்களிடம் அதிக வட்டி தருகிறோம் என்று மக்கள் பணத்தைச் சுருட்டியிருக்கும் நிறுவனங்களால், மக்களோடு, அப்பாவி முகவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை சென்றதும், காவல்துறை தலைமை இயக்குனரைச் சந்தித்து, இந்த நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக சார்பாக மனு கொடுக்கவிருக்கிறோம்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து, பத்து ஆண்டுகளாக, நேர்மையான நல்லாட்சி வழங்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக, பிரதமர் பொறுப்பேற்க, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.