ஒடிசா சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல அதிவேக ‘அபியாஸ்’ ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 02-ஆம் தேதி வரை, வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கவல்ல அதிவேக ‘அபியாஸ்’ ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டது. நான்கு முறையும் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது
பூஸ்டரை பாதுகாப்பாக விடுவித்தல், ஏவுகணையை செலுத்துதல், திட்டமிட்ட ஏவுகணை வேகத்தை அடைதல் போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த ஏவுகணை ஏடிஇ நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆட்டோ பைலட்டின் உதவியுடன் தானியங்கி பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அபியாஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் வளர்ச்சி ஆயுதப் படைகளுக்கான வான்வழி இலக்குகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார்.
இந்த அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை ஆகியவற்றில் தொடர்புடைய குழுக்களின் முயற்சிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் பாராட்டினார்.