மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார் என்று இந்திய தொல்லியல் துறை, ஆர்டிஐ-யில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மசூதி கட்டுவதற்காக முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் உள்ள ஒரு கோவிலை இடித்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை (ASI) பதில் அளித்துள்ளது.
ஆர்டிஐ பதிலில், இந்திய தொல்லியல் துறை நவம்பர் 1920 அரசிதழில் இருந்து ஒரு பகுதியை இணைத்துள்ளது, அதில் “கட்ரா மேட்டின் பகுதிகள் நசுல் குத்தகைதாரர்களின் வசம் இல்லை, அதன் மீது முன்பு கேசவ்தேவ் கோவில் இருந்தது, அது அகற்றப்பட்டு அவுரங்கசீப்பின் மசூதிக்காக பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள மைன்பூரியில் வசிக்கும் அஜய் பிரதாப் சிங் என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆக்ரா வட்டத்தின் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படும் கேசவ்தேவ் கோவிலின் “இடிப்பு” தொடர்பான தகவல்களுக்கு சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்திய தொல்லியல் துறை அதன் RTI பதிலில், “கிருஷ்ணா ஜென்மபூமி” என்ற வார்த்தைகளை குறிப்பாக குறிப்பிடவில்லை, ஆனால் முகலாய பேரரசர் ஔரங்கசீப் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்திருந்த கேசவ்தேவ் முன்னாள் கோவிலை இடித்ததை உறுதிப்படுத்தியது.
முக்கிய ஆதாரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பதாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நியாஸின் தலைவர் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.
“வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், ஔரங்கசீப் 1670ஆம் ஆண்டு கோயிலை இடிக்க ஆணையிட்டார் என்று எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து அங்கு ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது.
இப்போது ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த இந்திய தொல்லியல் துறை இந்த தகவலை சான்றளித்துள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி விசாரணையின் போது இந்திய தொல்லியல் துறை பதிலை உயர்நீதிமன்றத்தில் முன்வைப்போம், ”என்று அவர் கூறினார்.