மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பின்பு பணம், போன், பேக் உள்ளிட்ட பொருள் திருட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று உலகெங்கிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டில் தற்போது தென்னாபிரிக்க டி20 லீக் தொடரானது இரண்டாவது சீசனாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த 28 வயதான பேபியன் ஆலன் அந்த தொடரில் பேர்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற போது திடீரென கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சம்பவத்தின் போது அவரை வழிமறித்த சில மர்ம நபர் அவர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த பணம், செல்போன், டைரி மற்றும் பேக் போன்றவற்றை திருடிவிட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளையில் அவருக்கு எந்த காயமோ, பாதிப்பையோ அவர்கள் ஏற்படுத்தவில்லை. மேலும் இப்படி சர்வதேச டி20 லீக் போட்டியில் விளையாடும் வீரருக்கு பாதுகாப்பு இருந்தும் அவர்களை மீறி இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” பேபியன் ஆலனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது உண்மைதான். அவரிடம் இருந்த பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதை தவிர்த்து அவருக்கு எந்த காயமோ, ஆபத்தோ ஏற்படவில்லை.
இது குறித்த தகவல் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. அதோடு அவருக்கு துணையாக தற்போது அனைத்து உதவிகளும் செய்ய பேர்ல் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் துணைநிற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.
தற்போது அவருடன் எங்களது நாடு வீரர் மெக்காய் மற்றும் எங்களது தலைமை பயிற்சியாளரும் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.