கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான லாவலின் ஊழல் முறைகேடு வழக்கு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ளது இடுக்கி மாவட்டம். இங்கு பள்ளிவாசல், செங்களம், பன்னியார் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையங்களைப் புனரமைக்கக் கேரள அரசு முடிவு செய்தது.
இதற்காக, கடந்த 1995 -ம் ஆண்டு கேரள அரசு, கனடா நாட்டில் உள்ள எஸ்.என்.சி. – லாவலின் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இந்த நீர்மின் நிலையங்கள் நல்ல முறையில் செயல்படுவதாகவும், தேவைப்பட்டால், அதன் திறனை மேம்படுத்தினாலே போதும் என்றும் மத்திய மின்சார ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது.
ஆனால், இதனை கேரள மின்சார வாரியம் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால், ரூ. 86.25 கோடி இழப்பு ஏற்படு உள்ளதாகவும்இதில், அன்றைய மின்சாரத் துறை அமைச்சர் பினராயி விஜயன் உள்பட 7 பேருக்கு, தொடர்பு உள்ளது என சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, சி.பி.ஐ குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனக் கூறி கடந்த 2013-ம் ஆண்டு பினராயி விஜயனை உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து, 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், பல வருடங்களாக இந்த வழக்கு விசாரணை செய்யவில்லை.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு ஆஜராகி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதன் பேரில், மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.