தமிழகத்திலேயே மத்திய அரசின் திட்டங்கள் மிகக் குறைவாகப் பெற்றுள்ள மாவட்டமாக, ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சோளிங்கரில் ஒரு கடிகை, அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது பத்ம புராணம். அதுவே திரு கடிகாசலம் ஆகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கரில், 500 அடி உயர மலையில் யோகநிலையில், யோக நரசிம்மர் வீற்றிருக்கும் புண்ணியத் தலம்.
ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீநாதமுனிகள் போன்ற மாமனிதர்கள் தரிசனம் செய்த ஆலயம். அசுரர்களை அழித்து, தர்மத்தை காக்க அவதாரம் செய்த நரசிம்மர், மக்களை வாட்டும் தமிழகத்தின் கொடிய அரசியலையும் அகற்ற அருள் செய்வார். விவசாயத்தையும் நெசவையும் நம்பி வாழும் பகுதி சோளிங்கர். கிட்டத்தட்ட ஐயாயிரம் தறிகள் இங்கே இந்த தொகுதியில் செயல்படுகின்றன.
தமிழகத்திலேயே மத்திய அரசின் திட்டங்கள் மிகக் குறைவாகப் பெற்றுள்ள மாவட்டமாக, ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. மத்திய அரசின் திட்டங்களைத் தொகுதிக்குக் கொண்டு வருவது மட்டுமே, பாராளுமன்ற உறுப்பினருடைய பணி. ஆனால், அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்ரட்சகனுக்கு, தொகுதி பற்றி எந்தக் கவலையும் இல்லை.
அவருக்கு, தனது பல ஆயிரம் கோடி சொத்துகளைப் பாதுகாக்கவே நேரம் சரியாயிருக்கும். 1250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. இவரால் ஆற்காடுக்கு ஒரு பயனும் இல்லை.
மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை தனது தொகுதிக்குக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் தேர்தலில் அரக்கோணம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பாஜக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவாக இன்னும் 30 ஆண்டுகள், அதாவது 2044 ஆம் ஆண்டு வரை தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் பாஜக ஆட்சியில், ஒன்பது ஆண்டுகளில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கிறோம்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று அடுத்த நான்கு ஆண்டுகளில், 2028 ஆம் ஆண்டு, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும். காங்கிரஸ் கட்சி முப்பது ஆண்டுகளில் வைத்த இலக்கை, பாஜக ஆட்சியில், நமது நாடு 14 ஆண்டுகளில் அடையப் போகிறது.
காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சிக்கும், பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு, பாஜகவின் எண்ணம், சிந்தனை, கனவு, இலக்கு உழைப்பு, மக்கள் வைத்திருக்கும் அன்பு என அனைத்தும் பெரிது. அதனால்தான் முடியாது என்று இத்தனை ஆண்டுகளாக நினைத்திருந்தவற்றை எல்லாம் முடித்துக் காட்டியிருக்கிறோம்.
காஷ்மீரில் ஆர்டிகிள் 370, அயோத்தி ராமர் கோவில் என எவற்றையெல்லாம் காங்கிரஸ் கட்சி முடியாது என்று சொன்னதோ அவை அனைத்தும் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தைரியமான முடிவுகளால் தீர்வு காணப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி நமது நாட்டு மக்களை சோம்பேறிகளாகப் பார்க்கிறார்கள். முன்னாள் பிரதமர் நேரு அவர்கள், இந்திய மக்கள் சோம்பேறிகள், எனவே நாட்டின் வளர்ச்சி விரைவாக வராது என்று கூறினார். காங்கிரஸ் கட்சி இனி எதிர்க்கட்சி வரிசையில் கூட இருக்க முடியாது. பாராளுமன்றப் பார்வையாளர் இருக்கையில் மட்டுமே அமர வைக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர்.
நமது பாரதப் பிரதமர் மோடி, கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார்.வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 க்கும் அதிகமான இடங்கள் பெற்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் இம்முறை துணை நிற்பது உறுதி எனத் தெரிவித்தார்.