அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ‘பாரத் அரிசி’ என்ற பெயரில், சில்லறை சந்தையில் ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
கடந்த சில மாதங்களாக அரிசியின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாரத் அரிசி என்ற பெயரில், மலிவு விலையில், அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இத்திட்டத்தின் தொடக்க விழா, தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 5 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி பாக்கெட்டுகளை வழங்கினார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது, மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 81 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஏழைக் குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை சேமிக்கிறது. இம்முயற்சி விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும் என்று கூறினார்.
ஏற்கெனவே, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், மலிவு விலையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ வெள்ளை கொண்டைக் கடலையையும், சில்லறை விற்பனை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மானிய விலையில், அரிசி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. பாரத் அரிசி கிலோ ரூபாய் 29 விலையில், 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் விற்பனை தொடங்கி உள்ளது.