இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. ஆனா, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், சுற்றுலாவை நம்பி இருந்த நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
அந்த நாடுகள் கொரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு, சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதால், அவர்களை கவரும் வகையில், வியாட்நாம், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது. ஆனால், சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி, பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும், விசா இல்லாமல் ஈரானுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை ஈரானில் தங்கலாம். 15 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி கிடையாது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.