அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேலைப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
“திட்ட மேலாண்மை மற்றும் சாலைப் பாதுகாப்பில் சிறந்து விளங்குதல்” என்ற கருப்பொருளுடன் “தேசிய நெடுஞ்சாலை சிறப்பு விருதுகள்” வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசியர்,
சாலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்று கூறினார்.
சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது அணி உணர்வின் விளைவாகும் என்று அவர் தெரிவித்தார். செலவைக் குறைப்பதிலும், கட்டுமானத்தின் தரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.
சாலைப் பாதுகாப்பு, உயிர்களைக் காப்பாற்றுதல், சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக விருது பெற்ற ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்களை பாராட்டினார்.
நாட்டில் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் “தேசிய நெடுஞ்சாலை சிறப்பு விருதுகளை” தொடங்கியது.
நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செயல்பாட்டில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்குவதற்கும் இது உதவும் எனத் தெரிவித்தார்.