மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில், நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி, பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதனால், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல், அதிர்வுகள் உணரப்பட்டன.
வெடி விபத்து குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்பகுதியில், இடிபாடுகளை அகற்றி, இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
இந்த விபத்தில் அருகில் இருந்த வீடுகளும், இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமாகின. இந்த கோர வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் காயமடைந்த 170-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.