அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதனால், அவரை விசாரணைக்கு வருமாறு ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அதனை அவர் புறக்கணித்துவிட்டார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 5 சம்மன் அனுப்பியது. அனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இது சட்டவிரோத செயல் என நீதிபதி முன்பு தனது வாதத்தை முன்வைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா, அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா தெரிவித்துள்ளார். அதில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது அது சட்டவிரோதமானது எனக் கெஜ்ரிவால் கூறினார்.
தற்போது டெல்லி நீதிமன்றமே சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கெஜ்ரிவாலின் உண்மையான முகம் அம்பலப்படுத்திற்கு வந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.