இந்துக்கள் ஆண்டு முழுவதும் எத்தனையோ நாட்கள் விரதம் இருந்தாலும், அதில், மிக முக்கியமான நாளாக அமாவாசை கருதப்படுகிறது. இந்த அமாவாசைநாள் தான் முன்னோர் வழிபாட்டிற்குச் சிறப்பான நாள் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனாலும், தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்து.
இதில், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று, நமது முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து நம்மைக் காண பூமிக்கு வரும் நாளாகும். தை மாதத்தில் வரும் அமாவாசை, நமது முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்கி விட்டு, மீண்டும் பித்ருலோகத்திற்குச் செல்லும் நாளாகும்.
இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்தால் நல்ல பலனை கொடுக்கும். குறிப்பாக, முறையாக முன்னோர் வழிபாட்டினை மேற்கொண்டால் பித்ரு தோஷம், முன்னோர்கள் சாபம் உள்ளிட்டவைகள் நீங்கும்.
இப்படி சிறப்பு வாய்ந்த தை அமாவாசை, 2024-ம் ஆண்டு பிப்ரவரி 9 -ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. காலை 7.53 மணிக்கு துவங்கும் அமாவாசை, பிப்ரவரி 10 -ம் தேதி காலை 4.34 வரை உள்ளது.
இதனால், அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், 9-ம் தேதி காலை 8 மணிக்குப் பின்னர் கொடுக்க வேண்டும். திதி கொடுக்க காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை உகந்த நேரமாகும்.
எனவே, இந்த நாளில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து மனம் உருக வழிபட்டால், வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெறலாம்.