பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில், 26 பேர் உயிரிழந்தனர். பொதுத்தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், இச்சம்பவம் அந்நாட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 8) பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல் குண்டு வெடிப்பு சம்பவம் பலூசிஸ்தான் மாகாணத்தில் சுயேட்சை வேட்பாளரின் அலுவலகத்திற்கு வெளியே நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லை அருகிலுள்ள பாகிஸ்தானின் கீலா சைபுல்லா பகுதியில் இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அறிக்கை ஒன்றை அளிக்கும்படி, தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஜி.யிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.