பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம், வன்முறை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல், பொருளாதாரம் என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மொத்தம் 12 கோடியே 85 இலட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக அந்நாடு முழுவதும் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சின்னமான கிரிக்கெட் பேட்டை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. இதனால், அக்கட்சி வேட்பாளர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன் காரணமாக, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்நாடு முழுவதும் இராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், போலீசார் என மொத்தம் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பாதுகாப்பு நிலை மோசமடைந்து வருவதால், அந்நாடு முழுவதும் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.