ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 24 வயது பெண்ணை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், கங்காபூர், குட்லா கிராமத்தில் நேற்று 24 வயது மோனிகா என்ற பெண் ஒருவர் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் உடனடியாக தங்கள் பணிகளை தொடங்கினர். கங்காபூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கவுரவ் சைனி தலைமையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புப் குழுக்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆழ்துளை கிணற்றின் ஆழம் 95 முதல் 100 அடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய பெண்ணை மீட்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிந்தளவு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 8 மணி முதல் மோனிகா வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. இரவு வெகு நேரமாகியும் மோனிகா வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் மோனிகாவை தேடினர்.
ஆனால் அந்த பெண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் ஆழ்துளை கிணறு அருகே மோனிகாவின் செருப்புகள் கிடந்ததைக் கண்டு, அந்த பெண் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருக்கலாம் என குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
பின்னர் குடும்பத்தினர் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணை மீட்கும் பண்ணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.