தமிழக மாணவர்களை இனியும் நீட் தேர்வை வைத்து ஏமாற்ற முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சோழ மன்னர்களால், பல்லவ மன்னர்களால் ஆளப்பட்ட மண். தென்னிந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட சோழப் பேரரசுக்கும் இராஷ்டிரகூடர்களுக்கும் இடையே தக்கோலப் போர் நடந்த மண்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட ஜலநாதீஸ்வரர் கோவில், கங்காதீஸ்வரர் கோவில், கோதண்டராம சுவாமி ஆலயங்கள் அமைந்திருக்கும் மண்.
மும்பையிலிருந்து சென்னை ராயபுரத்துக்கு வந்த தென்னிந்தியாவின் முதல் ரயில், அரக்கோணம் சந்திப்பு வழியாகவே பயணப்பட்டது. தெற்காசியாவின் மிக நீளமான ரன்வே அமைந்திருக்கும் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலையம் அமைந்திருக்கும் ஊர் என்பதும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய உணவுக் கிடங்கு அமைந்திருக்கும் ஊர் என்பதும் அரக்கோணத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார பாராளுமன்ற உறுப்பினரை அரக்கோணம் பெற்றிருக்கிறது. ஆனால், அவரால் திமுகவுக்கு மட்டும்தான் பயனே தவிர, அரக்கோணம் தொகுதிக்கு எந்தப் பயனும் இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு எந்தத் திட்டங்களையோ, மக்கள் பணிகளையோ அவர் கொண்டு வந்ததில்லை. மாறாக, 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் என்ற அவப்பெயர்தான் தொகுதிக்கு வந்திருக்கிறது.
ஜெகத்ரட்சகன் நடத்தும் மருத்துவக் கல்லூரியில், கல்வி இடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து டொனேஷன் வாங்கியதை, கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்த 400 கோடி ரூபாய், அவர் நடத்தும் சாராய ஆலையில் எழுதிய பொய்க் கணக்கு 500 கோடி ரூபாய், அவர் நடத்தும் அறக்கட்டளையின் பணத்தை தனது சொந்த செலவுக்காகப் பயன்படுத்திக் கொண்டது 300 கோடி, 25 கோடி ரூபாய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்ததாக போலியாக கணக்கு எழுதியது, மருத்துவக் கல்லூரி இடங்களை விற்க இடைத்தரகர்களுக்குக் கொடுத்தது 25 கோடி என 1,250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, அவரது வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில் கண்டறிந்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் நீட் அரசியலின் ரகசியமும், டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருப்பதன் ரகசியமும் இந்தப் பணத்தில்தான் இருக்கிறது. ஜெகத்ரட்சகன், டிஆர் பாலு இருவரின் சாராய ஆலைகளில் இருந்துதான் டாஸ்மாக் கடைகளுக்கு 44% சாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. டாஸ்மாக்கை மூட திமுக எப்படி முன்வரும்? நீட் தேர்வை ஒழிப்போம் என்று கையெழுத்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
சமீபத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு நடந்த மைதானத்தைச் சுற்றியுள்ள குப்பைத் தொட்டிகளில், நீட்டை எதிர்த்து திமுக கையெழுத்து வாங்கிய அஞ்சல் அட்டைகள் கிடந்தன. தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வி வேண்டுமென்றால், நீட் தேர்வு வேண்டும் என்பது திமுக தொண்டர்களுக்கே நன்கு தெரியும். அதனால்தான் திமுகவின் நீட் தேர்வு எதிர்ப்பை, திமுக தொண்டர்களே குப்பைத்தொட்டியில் போட்டு விட்டார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் மாணவர்களாக தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். முதல் பத்து இடங்களில் நான்கு பேரும், முதல் ஐம்பது இடங்களில் பத்து பேரும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். நீட் தேர்வில் நமது மாணவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏழை, எளிய, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியரின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறி வருகிறது. தமிழக மாணவர்களை இனியும் நீட் தேர்வை வைத்து ஏமாற்ற முடியாது.
அமைச்சர் காந்திக்கு அவரது பெயர் சற்றும் பொருத்தமற்றது. 1994 ஆம் ஆண்டு, கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். தற்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்து பணம் குவித்துக் கொண்டிருக்கிறார். இலவச வேட்டி சேலை வழங்குவதில், பெருமளவில் ஊழல் நடந்திருக்கிறது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு மத்திய அரசு நிதியை நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், நமது மத்திய அரசு, தமிழக கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நேரடியாக வழங்கிய தொகை 19,936 கோடி ரூபாய். இன்றைய தினம், திமுக அரசு, தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களிடம் இருக்கும் நிதி அனைத்தையும், தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கச் சொல்லி உத்தரவு இட்டிருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடக்காத அநியாயத்தைத் துணிந்து செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு.
தமிழக அரசை நடத்த, கருவூலத்தில் பணம் இல்லை. ஏனென்றால், எட்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. திமுக ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி புதிய கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு ரேஷன் அட்டையின் மீதும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே பணம் இல்லாத நிலை வரப் போகிறது. அனைத்துக்கும் காரணம், திமுகவின் ஊழல். எல்லா துறைகளிலும் ஊழல்.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, மத்திய அரசு, கிராமப் பஞ்சாயத்து பயன்படுவதற்காக நேரடியாக அனுப்பிய நிதியை, திமுக அரசு கேட்க எந்த உரிமையும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின், பஞ்சாயத்து நிதியைப் பறிக்க முயற்சிக்காமல், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட திமுகவின் கோடீஸ்வரர்களிடம் நிதி வாங்கி கட்சியையும் ஆட்சியையும் நடத்தட்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு, முதலீடு ஈர்க்கிறோம் என்ற பெயரில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் என வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தார். ஒரு ரூபாய் கூட முதலீடு தமிழகத்துக்கு வரவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். மறுபடியும் ஸ்பெயினுக்கு முதலீடு ஈர்க்கச் செல்கிறோம் என்ற பெயரில் சுற்றுலா மேற்கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின், பத்து நாட்கள் ஸ்பெயினில் தங்கியிருப்பது முதலீட்டை ஈர்க்க என்ற திமுகவின் கட்டுக்கதையை நம்ப மக்கள் முட்டாள்கள் அல்ல. திறனற்ற, மோசமான, லஞ்ச ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் இந்தியாவின் கஞ்சா தலை நகராக மாறியிருக்கிறது. பள்ளி மாணவர்கள் கஞ்சா, சாராயத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பார்த்த பிறகு, தமிழகத் தாய்மார்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகமும் இம்முறை நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்தும் என்பது உறுதி எனத் தெரிவித்தார்.