பட்டினி கிடந்து இறந்தால், சொர்க்கத்திற்கு செல்லலாம் எனக் கூறி 191 குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோரைக் கொன்ற கென்யா நாட்டு பாதிரியார் மீது அடுத்த மாதம் 7-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில், மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ’குட் நியூஸ் என்ற சர்வதேச அமைப்பின் பாதிரியாராக பால் மெக்கன்சி நெதாங்கே உள்ளார்.
இவர் தனது பிரசங்கத்தின் போது, பட்டினி கிடந்து இறந்தால், உலகம் அழியும் முன் சொர்க்கத்தை அடைவீர்கள் என போதனை செய்துள்ளார். இவரின் பேச்சை உண்மை என்று நம்பி பலர் பட்டினி கிடந்து உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனை அடுத்து, தேவாலயம் அமைந்துள்ள சுமார் 800 ஏக்கர் வனப்பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அப்பகுதியில், 400-க்கும் மேற்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இதில், 191 உடல்கள் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிரியார் மற்றும் அவரின் 29 சீடர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் அனைவரும் பட்டினியால் இறந்தது தெரியவந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக மலிண்டி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. பாதிரியார் மற்றும் அவருடைய சீடர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், அந்த 30 பேரும் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.
அந்த பாதிரியாருக்கு எதிராக மனித படுகொலை, குழந்தைகளுக்கு கொடூரம் இழைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கு எதிரான விசாரணை வருகிற மார்ச் 7-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.