திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் ரோடு, முதலிபாளையம் மற்றும் ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெறி நாய்கள் அட்டகாசம் அதிகமாகிவிட்டது.
அங்கு சுற்றித் திரியும் வெறி நாய்கள், கடந்த 3 மாதங்களில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோரை துரத்தி துரத்தி கடித்துள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்வோர், ஏன் வயதானவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை அந்த வெறிநாய்கள்.
இது மட்டுமல்லாமல், வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி மற்றும் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளையும் கடித்துக் குதறியுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பேசிய அப்பகுதி சமூக ஆர்வலர் சேகர் என்பவர், திமுக ஆட்சிக்கு எப்ப வந்ததோ அப்பே எங்கள் நிம்மதி எல்லாம் போச்சு. இப்போ இந்த நாய் தொல்லை வேறு.
எங்கள் பகுதியில் பகல் – இரவு என இல்லாமல் எந்த நேரங்களிலும் வீட்டைவிட்டு வெளியே போக அச்சமாக இருக்கு. நாய்கள் கடித்து விடுமோ என அச்சத்துடனே வெளியே போக வேண்டி இருக்கு.
ஆனால், திருமண அழைப்பு, புதிய வீடு திறப்பு விழா உள்ளிட்டவைகளுக்கு வெளியூரில் இருந்து உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வருபவர்கள் நிச்சயம் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள். டாக்டர்கிட்ட போன ஆயிரம் ரூபாய்க்கு மேல பீஸ் வாங்குகிறார்கள். பணத்திற்கு பணமும் போய், நிம்மதியும் போச்சு. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துவிட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி, வெறிநாய்க்கடி பிரச்சினைக்கு 15 நாள்களுக்குள் மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவில்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.