மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில், படகில் இருந்த 3 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குவைத்தில் இருந்து படகில் தப்பி வந்ததும் தெரியவந்தது.
மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இருப்பதை மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த படகில் இருந்தவர்களை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், விஜய் வினோத் அந்தோணி (29), நிடிசோ டிட்டோ (31) மற்றும் சகாயா ஆன்டனி (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 3 பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை நகரின் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மீன்பிடி படகு சுற்றித் திரிந்ததை அடுத்து, படகில் இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூறியதாவது, மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக குவைத்துக்குச் சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் பறிக்கப்பட்டது. சரியான நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை. குவைத்தில் இருந்தபோது அவர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக கூறினர்.
மூவர் குறித்தும் விசாரணை நடத்த, மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படை (ATS), புலனாய்வுத்துறை (IB) மற்றும் கடற்படை உளவுத்துறை ஆகியவற்றின் குழுவும் மும்பை வந்துள்ளது.