நாடாளுமன்ற தேர்தலை யொட்டி, தமிழ்நாட்டில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்தலுக்குத் தேவைப்டும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளும் நடந்து முடிந்துள்ளது. தற்போது, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பணி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை யொட்டி, தமிழ்நாட்டில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர் லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, ஸ்ரீகாந்த் ஐ.ஏ.எஸ் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.