பாகிஸ்தானில் வெடிகுண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல், பொருளாதார நெருக்கடி என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்நாடு முழுவதும் இராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், போலீசார் என மொத்தம் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பாதுகாப்பு நிலை மோசமடைந்து வருவதால், அந்நாடு முழுவதும் மொபைல்இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இன்று காலை போலீசார் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.